10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? வெளியானது கால அட்டவணை!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? வெளியானது கால அட்டவணை!

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான அட்டவணையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை 10:30 மணியளவில் வெளியிட்டார்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மை கல்வி அலுவலர்கள் ம்ற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணை விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைகிறது. மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைகிறது. 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், 2026ஆம் ஆண்டு முதன்முறையாக 12ஆம் வகுப்பு கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 7,513 பள்ளிகளைச் சேர்ந்த 8,07,000 மாணவர்கள், 3,317 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 12,485 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 8,70,000 மாணவர்கள் 4,113 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே நடைபெறும் என்பதால், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே அதற்கு முன்னதாகவே பொதுத் தேர்வு பணிகள் அனைத்தும் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்த பிறகே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.