சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் திடீரென வழியில் நின்றதால் பரபரப்பு
டிராக்கில் கேட்ட வினோத சத்தத்தால் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென வழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலானது காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த பேரணி அருகே மாலை சுமார் 6.30 மணி அளவில் வரும் போது ட்ரெயின் தண்டவாளத்தில் வினோதமான சத்தம் கேட்டதை அடுத்து ரயில் பைலட் ரயிலை அதே இடத்தில் நிறுத்திவிட்டு திண்டிவனம் ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ரயில் தண்டவாளம் முழுவதும் சோதனை செய்தனர். அதில் எந்த ஒரு பொருளும் இல்லாததால் ட்ரெயினை மெதுவாக எடுக்க அறிவுறுத்தினர். அதன்பேரில் பல்லவன் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது.
மேலும் ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் ஏதேனும் விரிசல்கள் உள்ளதா? எனவும் சோதனையில் ஈடுபட்டனர். வினோதமான சத்தம் வந்த பேரணி பகுதியில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் ட்ரெயின் திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் 45 நிமிடம் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸை தொடர்ந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் 45 நிமிடத்திற்கு மேலாக காலதாமதமாக இயக்கப்பட்டன.