எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு - தொகுதி பங்கீடு பேச்சா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது, "திமுக என்ற தீயசக்தியை வீழ்த்தும் நோக்கத்துடனும், திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கும் ராஜதந்திரத்துடனும் பாஜகவை அதிமுக தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இணைத்திருக்கிறார்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று கூறாமல், அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் தெரிவித்தார்.
அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், 'கூட்டணி ஆட்சி' என்ற சொல்லாடலை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தனித்து ஆட்சி எனக் கூறி பாஜகவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், "எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசினீர்களா?" எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை" என்றார்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, "இல்லை" என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாளை மறுதினம் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.