நாதகவில் இருந்து காளியம்மாள் விலகலா? பரபரப்பு பேட்டி
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-ல் விலகிய காளியம்மாள், புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த முடிவை ஒரிரு நாளில் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் (நாம் தமிழர் கட்சி முன்னாள் பொறுப்பாளர்) காளியம்மாள் “பாரதி ஒரு காலக்கண்ணாடி” என்ற தலைப்பில் விழாப்பேருரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், “ஆகப்பெரும் ஆற்றல் படைத்த பெண்களை ஒரு சில விளம்பரங்களுக்கு ஒரு காரணப் பொருளாக முன்னிலைப்படுத்தி மாற்றி பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. அப்படி ஒரு பார்வையில் பெண்கள் இல்லை. பெண்கள் மிகப் பெரிய திறன் கொண்ட வலிமை மிக்கவர்கள் அவர்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறேன்” என்றார்.
சட்டப் பேரவை தேர்தல் குறித்து பேசிய காளியம்மாள், “மொழி அழிந்தால், இனம் அழியும் என்று சீமான் கூறியுள்ள கருத்து ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது. எனக்கு மொழி சார்ந்த புரிதலை ஏற்படுத்தியவர் சீமான். சரியான கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய அரசியல் பயணம் மக்களுடன் சேர்ந்து இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவேன், மக்களின் பிரதிநிதியாக நிற்பேன். எப்படி எந்த சூழலில் என்பது வரும் காலத்தில் புரியும்.
புதிய கட்சி ஆரம்பிப்பதா? அல்லது ஒரு கட்சியில் இணைவதா? என்பது குறித்த முடிவை ஒரிரு நாளில் அறிவிப்பேன். ஒரு கட்சியை நோக்கி ஒருவர் செல்வது அவரது தனிப்பட்ட முடிவு, தனிப்பட்ட தேர்வு, அதற்குப் பிறகு அவர்கள் மக்கள் பணியில் என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். தவிர ஏன் அந்த அமைப்பிற்கு போனார்கள்? என்பது கேள்விக்குரியது அல்ல. நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி ஓராண்டு ஆகியுள்ளது. அதற்கான விடை அவரே கூறி இருப்பதாக நான் நம்புகிறேன்” என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசுகையில், “திருப்பரங்குன்றம் பிரச்சனையில் வரலாற்று நகர்வுடன் சேர்ந்த கேள்வியும் வருகிறது. கந்தனுக்கான மலையா? சிக்கந்தர் மலையா? என்ற கேள்விக்கு வரலாற்று தேடுதல் இல்லாமல் எதைச் சார்ந்தது என்று நம்மால் கூற முடியாது. ஆனால் தற்போதைய சூழலில் மதம் சார்ந்து, ஜாதி சார்ந்து எந்த பிரச்சனையும் வராமல் அங்கு வாழும் மக்கள் இணக்கமாக வாழ்கிறோம் என்று கூறுகின்றனர்.
அந்த இடத்தில் பிரச்சனை வருவதும், பிரச்சனையை உண்டாக்குவதும் அதை சார்ந்து நீதிமன்றத்திற்கு செல்வதும், நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறுவதும் என்னைப் பொறுத்த வரை இணக்கமாக இருக்கின்ற மக்களிடம் ஒரு பிரிவை ஏற்படுத்துகின்ற ஒரு குதர்க்கமான சூழ்நிலையாக மாற வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். இதை வைத்து அரசியல் ஆக்குவதை முற்றிலுமாக தகர்க்க வேண்டும்” என்றார்.