புது கட்சியா? கூட்டணி பேச்சுவார்த்தையா? - ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி விசிட்

புது கட்சியா? கூட்டணி பேச்சுவார்த்தையா? - ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி விசிட்
அதிமுக இணையாவிட்டால் டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென கொச்சி வழியாக டெல்லி சென்றுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறார். இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “அதிமுக ஒருங்கிணைய இன்னும் ஒரு மாதம் கெடு. அப்படி ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிட்டால் டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும். தொடர் தோல்வி, தவறான பொதுக்குழுவால் மக்கள் நம்பிக்கையை அதிமுக இழந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம், “அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கடந்த மூன்றரை வருடங்களாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக அமைதி புரட்சி நடத்திக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஒன்றிணையாவிட்டால், ஒரு வியூகத்தை அமைத்து, ஓ. பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்பு குழு, கழகமாக மாறி மாபெரும் வெற்றியை பெறும்.
நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் அதிமுக தொண்டர்கள். நமக்கு இடையூறாக இருக்கும் அந்தத் தீய சக்தியை விரட்டி அடிப்பதுதான் நமது ஒரே நோக்கமாக இருக்கும். ஒற்றுமையாக இருங்கள்; இன்னும் ஒரு மாதத்தில் வெற்றியை நோக்கி நாம் நகருவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் கோவையில் இருந்து கொச்சி சென்று அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார். அங்கு புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும், கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார். ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது குறித்து பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.