தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது: செல்வப்பெருந்தகை கருத்து

தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது: செல்வப்பெருந்தகை கருத்து

 “நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணியில் எல்லா சமூக தலைவர்களை வைத்துக் கொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று, அதனை பாஜக வாக்கு எனக் கூறுவது அபத்தம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இன்று காலை மீஞ்சூரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும், பொன்னேரி எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாக்கு திருட்டு தொடர்பாக, பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து உரையாற்றினர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழகத்தில் 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்திருக் கிறோம். வேர்களைத் தேடி காங்கிரஸ் செல்கிறது. வாக்கு உரிமைக்காக தொடர்ந்து களத்தில் போராடுகிறோம். போகப் போகத் தெரியும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி. வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி, ஆட்சியில் பங்கு ஆகியவை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை முடிவெடுக்கும்.

பொன்னேரி (தனி) சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கூட்டணியில் கேட்டுப் பெறுவோம். நிரந்தர சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் எல்லா சமூக தலைவர்களை வைத்து கொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று, அதனை பாஜக வாக்கு என கூறுவது அபத்தம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது.” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.