முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் மடிக்கணினி; அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
வரும் ஆண்டுகளில் இருந்து முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது அவர், "கல்லூரி முடித்து சென்றவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது இந்த அரசு. கல்லூரி படிக்க சென்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு எங்களது அரசு'' என்று தெரிவித்தார்.
அமைச்சர் கோ.வி.செழியன் பேசும்போது, ''கடந்த ஆட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கபடும் என அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்லூரிக்கு சென்ற பிறகு அவர்களை தேடி சென்று வழங்கிய அரசு தான் உங்களின் அரசு. ஆனால் தனியார் கல்லூரிகளில் உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க உள்ள அரசு இந்த அரசு. இசை கல்லூரி மாணவர்களுக்கு கூட மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசும்போது, ''உங்களின் ஆட்சியில் வாங்கிய 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு தராமல் வீணாக்கியதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் கண்டிப்பாக பிஜி படிப்பார். அவர்கள் 'நான் முதல்வன்' திட்டத்தில் திறன் மேம்பாடு பெறுவார்'' என்று தெரிவித்தார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ''இந்த ஆண்டு முன்னூரிமை அடிப்படையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் இருந்து முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படும். படித்து முடித்தவர்கள் மீண்டும் படிக்கவே மாட்டார்கள் என்று தீர்மானிக்க நாம் யார்? அவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பார்கள்'' என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ''தேர்தல் வரும்போது பொங்கல் பரிசு அறிவிப்பு வருகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே மக்கள் ஞாபகம் வருகிறார்களா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்'' என்று பேசினார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''ஒரு கரும்பை நான்காக வெட்டி பொங்கல் பரிசாக கொடுத்து சரித்திர சாதனை படைத்த அரசு அதிமுக அரசு தான்'' என்று தெரிவித்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, ''முதல்வர் பொறுப்பேற்ற உடன் கரோனா காரணமாக ரூ.4 ஆயிரம் கொடுத்தார். தென்மாவட்டங்களில் புயல் வெள்ளத்தில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. தேர்தலுக்காக எதையும் எங்கள் முதல்வர் செய்யவில்லை'' என்று தெரிவித்தார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ''பொங்கல் திருநாளை முன்னிட்டு முதன்முதலாக பொங்கல் பரிசு அளித்து இதற்கு முதன்முதலாக வித்திட்டது கலைஞர் ஆட்சி தான்'' என்று தெரிவித்தார்.