விரைவில் அகற்றப்படும் பாம்பன் பழைய ரயில் பாலம்!
புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டு வந்த நிலையில் அடுத்த 4 மாதங்களுக்குள் பழைய பாம்பன் பாலத்தை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலமும், இந்திராகாந்தி சாலைப் பாலமும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதில் 1914-இல் பாம்பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதுதான் இந்தியாவில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலமாகும்.
கப்பல்கள் செல்வதற்கு ஏற்றவாறு இந்த பாலத்தில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப்பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பாகும். இந்தப் பாலம் 1964-ஆம் ஆண்டு புயலில் சேதமடைந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நூறாண்டுகளை கடந்த இந்தப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், 2019-இல் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2020-ஆம் ஆண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 5 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, டெண்டர் வழங்கப்பட்டு பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற தற்போது பூமி பூஜை நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்னும் 4 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பழைய ரயில் பாலம் வரலாற்று சிறப்புமிக்க பாலம் என்பதால் அதனை அகற்றும்போது சேதம் ஏற்படாமல் இருப்பதற்காக பழைய ரயில் பாலத்தை அடுக்கடுக்காக வெட்டி எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக பாலத்தில் வரிசைப்படியாக எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதத்திலிருந்து படிப்படியாக ரயில் பாலத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 111 ஆண்டுகள் கடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை கடலிலிருந்து அகற்றி, ரயில் அருங்காட்சியத்தில் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.