அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை - சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கும் நோக்கில், இத்திருத்த சட்டத்தின் முன்வடிவை சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களிலும் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி ஒரு விண்ணப்பதாரர் ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பொருட்படுத்தாமல் அனைத்து நேரடி பணி நியமனங்களிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை அரசு வழங்கி வருகிறது.
அதில், '2010 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனங்களை செல்லுபடியாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'இனி வரும் காலங்களில் புதிதாக பணிக்கு சேருவோருக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயில்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதோடு, ஏற்கெனவே அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட நபர்கள், மிகை ஊதியத்தை கொண்ட பதவிகளில் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.