இழப்பீட்டு தொகை வழங்குவதில் தாமதம்: அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு பேருந்து மோதி உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.12,62,280 இழப்பீட்டு தொகையை 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேனியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சுப்பம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8.10.2016 அன்று, பழனிசாமி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது எதிர்பாராமல் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவம் இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியதற்காக தங்களது குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சுப்பம்மாள் தேனி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் பழனிசாமி குடும்பத்துக்கு ரூ.8.99 லட்சம் இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு 6.1.2024 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், இழப்பீட்டு தொகை வழங்கப்படாத நிலையில் சுப்பம்மாள் தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மக்கள் சமரச தீர்வு மையத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதால் சமரசத் தீர்வுக்காக வழக்கு மக்கள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு மக்கள் நீதிமன்றத்தில் 14.12.2024-ல் நடந்த விசாரணையில் ரூ.12,62,280 இழப்பீடு இறுதி செய்யப்பட்டது. இப்பணத்தை ஒரு மாதத்தில் வங்கியில் டெபாசிட் செய்வதாக போக்குவரத்து கழகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
அப்போது, போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.12,62,280-க்கான காசோலை வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கில் 14.12.2024-ல் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு 9 மாதம் தாமதமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு வட்டி வழங்க வேண்டும். எனவே மக்கள் நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையுடன் 9 மாத காலதாமதத்துக்காக மனுதாரருக்கு 6 சதவீத வட்டி வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.