ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து – ப்ளே ஸ்கூல் மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்!

அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தரைத்தளத்தில் இயங்கி வரும் ப்ளே ஸ்கூல் மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் தனியார் ப்ளே ஸ்கூல் இயங்கி வருகிறது. அதே கட்டடத்தின் முதல் மாடியில் தனியாருக்கு சொந்தமான திருமுருகன் ரியல் எஸ்டேட் அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில், முதல் மாடியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின் கசிவினால், ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
தீ வேகமாக பரவியதுடன், முதல் மாடி முழுவதும் தீக்கிரையாகும் அபாய நிலை உருவானது. உடனடியாக அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள ப்ளே ஸ்கூலில் பயின்று கொண்டிருந்த சிறு வயது குழந்தைகளை அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மிகுந்த விழிப்புடன் உடனடியாக பத்திரமாக வெளியேற்றினர். இதனால் எந்தவொரு மாணவருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக காட்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் காரணங்களைப் பற்றி விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காட்பாடி உட்கோட்டை துணை கண்காணிப்பாளர் பழனி கூறுகையில், "முதல் மாடியில் செயல்பட்டு வந்த தனியார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏசி மூலம் மின் கசிவு ஏற்பட்டது என்றத் தகவல் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதும், கீழ் தளத்தில் இருந்த ப்ளே ஸ்கூல் ஆசிரியர்கள் சிறுவர்களை உடனடியாக வெளியேற்றியதால், எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்தின் காரணங்கள், கட்டடத்திற்கான பாதுகாப்பு உள்கட்டமைப்புகள், மற்றும் மின்சாதனங்களின் பராமரிப்பு ஆகியவையும் விசாரணையின் போது கவனிக்கப்படும். இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், சம்பவ இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ ஆய்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து காட்பாடி தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி தெரிவித்ததாவது," இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து குறித்து எங்களுக்குத் தகவல் வந்ததும், உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கட்டடத்தின் முதல் மாடியில் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. தீயின் தன்மை மற்றும் கட்டட அமைப்பை பொருத்து, மிகுந்த கவனத்துடன் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் நாங்கள் இறங்கினோம். முன்னெச்சரிக்கையாக பள்ளி ஆசிரியர்கள் கீழ்தளத்தில் இருந்த சிறுவர்களை வெளியேற்றியதனால், எந்தவொரு உயிரிழப்பும், காயமும் ஏற்படவில்லை. இது மிகப்பெரிய நிம்மதியாகும். முதல் மாடி முழுவதும் பெரிதும் சேதமடைந்துள்ளது. தற்காலிகமாக தீ பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளோம். இது போன்ற சம்பவங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவசர நிலைகளில் உடனடி தகவல் வழங்க வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.