ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ரிச்சி பெர்ரிங்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்நாட்டு கிரிக்கெட் வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் பிசிசிஐ உத்தரவின் பேரில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த வங்கதேச அரசாங்கம், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களின் போட்டிகளை இலங்கையில் நடத்தும் படி ஐசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவை ஐசிசி ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம், எதிர் வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இருப்பினும் வங்கதேச அணி தங்களின் இறுதி முடிவை அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் தங்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததை அடுத்து, நாங்களும் இந்தியா சென்று விளையாட வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக வங்கதேசம் அறிவித்தது.
இதனையடுத்து தொடரில் இருந்து விலகிய வங்கதேச அணிக்கு பதிலாக, ஐசிசி தவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஸ்காட்லாந்து அணி குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நேபாளம் மற்றும் இத்தாலி அணிகளுடன் இணைந்து டி20 தொடரை எதிர்கொள்ளும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 6-வது முறையாக ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றது. இந்த நிலையில், எதிர் வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரிச்சி பெர்ரிங்டன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஸ்காட்லாந்து அணியை வழிநடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டாம் புரூஸுக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன் அவர் நியூசிலாந்து அணிக்காக 17 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜாஹினுல்லா இஷானுக்கும் ஸ்காட்லாந்து டி20 அணியில் முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணி: ரிச்சி பெரிங்டன்(கேப்டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜாஹினுல்லா இஷான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சஃபியான் ஷெரீஃப், மார்க் வாட், பிராட்லி வீல். ரிசர்வ் வீரர்கள்: ஜாஸ்பர் டேவிட்சன், ஜாக் ஜார்விஸ், மெகன்ஸி ஜோன்ஸ், கிறிஸ் மெக்பிரைட், சார்லி டியர்.