ஆஸ்திரேலிய ஓபன் 2026: அரையிறுதிக்கு முன்னேறி அல்காரஸ், சபலென்கா அசத்தல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர்கள் கார்லோஸ் அல்காரஸ், அரினா சபலென்கா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் நடப்பு சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றைய தினம் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடக்கம் முதல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் போராடி வென்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2 என்ற கணக்கில் கைப்பற்ற, மூன்றாவது செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் கார்லோஸ் அல்கார்ஸ் 7-5, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அதே போல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் லெர்னர் தியானை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டை ஸ்வெரெவ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த தியான் 7-6 என்ற கணக்கில் போராடி தனது கம்பேக்கை கொடுத்தார்.
பின்னர் சுதாரித்து விளையாடிய ஸ்வெரெவ் மூன்றாவது செட்டை6-1 என்ற கணக்கில் கைப்பற்ற, கடைசி செட்டையும் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 6-3, 6-7, 6-1 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் லெர்னர் தியானை வீழ்த்தி நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரிசின் அரினா சபலென்காவை எதிர்த்து, அமெரிக்காவின் இவா ஜோவிக் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சபலென்கா 6-3 மற்றும் 6-0 என்ற நேர் செட் கணக்கில் இவா ஜோவிக்கை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கஃபை எதிர்த்து, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்விடோலினா முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஸ்விடோலினா ஆதிக்கத்தை செலுத்தினார்.
இதன் மூலம் அவர் இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கோகோ கஃபை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மறுபக்கம் படுதோல்வியைச் சந்தித்த கோகோ கஃப் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார்.