உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று நிஷாந்த் குமார் சாதனை!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாந்த் குமார் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் உயரம் தாண்டுதள் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். முன்னதாக இவர் கடந்த பாரிஸ் மற்றும் டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் மற்றும் 2023, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்நிலையில், நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில், நிஷாந்த் குமார் தனது முதல் முயற்சியிலேயே 2.18 மீட்டர் தாண்டி அசத்தினார். மேலும் அவர் புதிய சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இருப்பினும் அவரது முதல் முயற்சியில் தாண்டிய உயரமே அவரின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து பேசிய நிஷாந்த் குமார், "இந்த நாளுக்காக நான் ஒரு வருடமாக காத்திருக்கிறேன். இதற்காக ஒவ்வொரு நாளும் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். எனது உழைப்பிற்கான பரிசு இன்று கிடைத்துள்ளது. இன்று என்னால் முடிந்ததைச் செய்ததன் மூலம், தங்கம் வென்றுள்ளேன்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு முன் இந்த தொடரில் நான் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன். அதனை என் ரேக்கில் வைத்திருந்ததிலிருந்து, அவற்றைப் பார்க்கவில்லை. இந்த தங்கப் பதக்கத்திற்காக நான் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். நான் அதற்குத் தயாராக இருந்தேன். மேலும் இன்று நான் தங்கம் வெல்வேன் என்பதை எனது டைரியிலும் எழுதியிருந்தேன். அது நடந்து விட்டது" என்று அவர் கூறினார்.
இது தவிர்த்து, மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கப்பதக்கம் வென்றார். அவர் 11.95 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம், முதலிடத்தைப் பிடித்து தக்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். முன்னதாக இவர் கடந்தாண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 200மீட்டர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரிலும் வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.