டி20 அணியில் மாற்றங்களை செய்த நியூசிலாந்து; முக்கிய வீரர்கள் கம்பேக்

டி20 அணியில் மாற்றங்களை செய்த நியூசிலாந்து; முக்கிய வீரர்கள் கம்பேக்

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் இருந்து டிம் ராபின்சன், கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது, இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்ததுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 28) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் விசாகப்பட்டினம் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து டி20 அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இருந்து கிறிஸ்டியன் கிளார்க் மற்றும் டிம் ராபின்சன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் ஜிம்மி நீஷம் மற்றும் லோக்கி ஃபெர்குசன் இடம் பெறுவார்கள் என்றும் நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது. மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியுடன் தொடக்க வீரர் ஃபின் ஆலன் இணைவார் என்றும் அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்காக தயாராகும் வகையில் நியூசிலாந்து அணி இந்த மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்திய அணியும் சில மாற்றங்களை செய்திருந்தது. அதன்படி திலக் வர்மா தொடரில் இருந்து முழுவதும் விலகியதாக அறிவிக்கப்பட்டதுடன், ஸ்ரேயாஸ் ஐயர் எஞ்சிய போட்டிகளிலும் இந்திய அணியுடன் பயணிப்பார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, இஷான் கிஷன், ரவி பிஷ்னோய்.

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜக்காரி ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, லோக்கி ஃபெர்குசன், இஷ் சோதி, ஃபின் ஆலன் (5ஆவது டி20ல் மட்டும்)