நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு... குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 வருட சிறை தண்டனை

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பல்சர் சுனில் உட்பட 6 பேருக்கு 20 ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு; திலீப் விடுவிக்கப்பட்டார். 2017 திருச்சூர்-எர்ணாகுளம் சம்பவம்.

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு... குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 வருட சிறை தண்டனை
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 6 பேருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் அளிக்கப்பட்டது. அதில் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதேநேரம், திலீப்பிற்கு குற்றத்தில் ஈடுபட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி திலீப் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 6 பேருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 7.5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற 5 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி இரவில் அந்த நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற ஒரு கும்பல், நடிகையின் காரின் பின்புறத்தில் மோதியுள்ளனர். இதனால், காரை நிறுத்தி இருதரப்பும் வாக்குவாதம் செய்தபோது, வலுக்கட்டாயமாக நடிகையின் காருக்குள் அந்த கும்பல் நுழைந்தது.
அந்த கும்பலை வழிநடத்திய பல்சர் சுனில், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், நடிகையை பின்னாளில் மிரட்டுவதற்காக அதை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்படி, திருச்சூர் - எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அந்த நடிகை கும்பலிடம் சிக்கி தவித்ததாக FIR-இல் கூறப்பட்டுள்ளது.
சினிமா பாணியில் வன்கொடுமையை அரங்கேற்றிய அந்த கும்பல், இறுதியாக இயக்குநர் ஒருவரின் வீட்டின் முன்பு நடிகையை இறக்கிவிட்டுவிட்டு தப்பியது. தனக்கு நடந்த துன்புறுத்தல் குறித்து, அந்த நடிகை தைரியமாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.