ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்! எப்படி சாப்பிடுவது?
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நீரிழிவு நோய் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியாவில், 18 வயதிற்கு மேல் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், 25 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, வாழ்க்கை முறையில் அதிகம் கவனம் செலுத்தி தங்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருப்பது நாள் முழுவதும் நிலையான ஆற்றலைத் தக்கவைக்க உதவுகிறது. இது சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் திடீர் பசி ஆகியவற்றைத் தடுக்கிறது.
மேலும், இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மிக முக்கியமாக, சரியான சர்க்கரை அளவு ரத்த நாளங்கள், நரம்புகள், சிறுநீரகங்கள் மற்றும் கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதில் முக்கியமாக உணவுப் பழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகள் இதோ.
வெண்டைக்காய்: வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கி, சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது. அதிகப் பலன்களைப் பெற காலையில் வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கலாம். மேலும், வெங்காயம் மற்றும் குறைந்த மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்பட்ட வெண்டைக்காய் பொரியல், குழம்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
பார்லி: இது நார்ச்சத்து நிறைந்த முழு தானியம் குறிப்பாக பீட்டா-குளுக்கன் நல்லளவில் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களைச் சீராக்க உதவுகிறது என்கிறது ஆய்வு. பார்லியை பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து கிச்சடி செய்யலாம். கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைச் சேர்த்து உப்புமா போலவும் செய்யலாம். அல்லது பார்லி, காய்கறிகள் மற்றும் இறைச்சி அல்லது காளான்கள் சேர்த்து சூப் செய்து உட்கொள்ளலாம்.
காலிஃப்ளவர்: இந்த காய்கறியில் சல்ஃபோராபேன் (Sulforaphane) நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து இன்சுலின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. காலிஃப்ளவர் துண்டுகளை பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கி, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம். அல்லது தக்காளி, வெங்காயம், மஞ்சள், சீரகம், கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி குழம்பு செய்து உட்கொள்ளலாம்.
அவகாடோ: நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையைக் கொண்டுள்ள அவகாடோ, செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலம் ரத்த சர்க்கரையை மிகவும் நிலையாக வைத்திருக்க உதவுகிறது என American Society of Nutrition தளத்தில் வெளியாகியுள்ளது. அவகாடோவை மசித்து, புளிப்பு மாவு டோஸ்டில் (Sourdough Toast) தடவி, எலுமிச்சை மற்றும் மிளகு சேர்த்து காலை உணவாக உண்ணலாம். இலை காய்கறிகள், கினோவா, பீன்ஸ், க்ரில் செய்யப்பட்ட இறைச்சியுடன் சேர்த்து சாலட் ஆகவும் சாப்பிடலாம்.
காளான்கள்: காளான்களில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவும் உள்ளன. இது இன்சுலின் எதிர்ப்புடன் (insulin resistance) தொடர்புடைய அழற்சியைக் குறைக்க உதவுகிறது. இவற்றை சாண்ட்விச்கள், சூப்கள் அல்லது சாலட்கள் செய்து எடுத்துக்கொள்ளலாம்.
டோஃபு: இது தாவர அடிப்படையிலான புரதம் ஆகும். இது மெலிந்த தசையை (lean muscle) ஆதரிக்கிறது. இதனால் உடலால் குளுக்கோஸை மிகவும் திறமையாகப் பயன்படுத்த முடியும். சூப்கள், சாதம் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ள சிறந்தது. காலையில் கூடுதல் புரதத்திற்காக ஸ்மூத்திகளில் கலந்து குடிக்கலாம் அல்லது காய்கறிகளுடன் வதக்கி உண்ணலாம்.
கிரீன் டீ: இந்த பானத்தில் கேட்டசின்கள் (catechins) நிறைந்துள்ளன, இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு எரிப்பைத் தூண்டுகிறது. 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, கிரீன் டீ பேகை 5 நிமிடங்கள் ஊற வைத்து எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துப பருகலாம்.