6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை வாங்க ரூ.2,036 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல்கட்ட நீட்டிப்பு திட்டத்தில் உள்ள வழித்தடங்களில், பயணிகளின் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை வாங்க ரூ.2,036 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சென்னையில் இரு வழித்தடங்களில் 54.1 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பான, சொகுசான, விரைவான பயணம் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சராசரியாக ஒரு மாதத்துக்கு 90 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை பயணம் செய்கின்றனர். இதற்கிடையில் 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில்கள் மக்களின் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லாததால், கூடுதல் பெட்டிகள் அல்லது கூடுதல் ரயில்களை இயக்க பயணிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
முதலில் ஏற்கெனவே உள்ள ரயில்களில் 2 பெட்டிகளை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இறுதியாக, புதிதாக 28 ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க ரூ.2,036 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. 168 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை முழுவதும் தயாரித்து முடிக்க இரண்டரை ஆண்டு காலம் ஆகும். 28 ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நிமிட இடைவெளியைக் காட்டிலும் குறைந்த நேரத்தில் அதிக ரயில்களை இயக்க முடியும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.