புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

 ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்வில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்த அரசு செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று (டிச.12) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட விழா நடைபெற்றது.

இந்த விழாவில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: மாதம் ரூ.1,000 வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ கடந்த 2023 செப்டம்பர் 15-ல் காஞ்சிபுரத்தில் முதல் கட்டமாக சுமார் 1.13 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம், மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார். இதன்மூலம், மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயன்பெறுவர்.

இதே நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மகளிருக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் 1000 ரூபாயைச் செலுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.