433 ரன்கள் குவித்து இந்திய அணி புதிய உலக சாதனை.. 234 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 433 ரன்கள் குவித்து, 3வது முறையாக 400 ரன்களுக்கும் மேல் விளாசிய முதல் அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணி 2 முறை, 400 ரன்களுக்கும் மேல் எடுத்திருந்தது. இந்நிலையில், நடப்பு யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணியுடன் விளையாடியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 433 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி, 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார். இதில் 14 சிக்ஸர்களை அவர் விளாசினார். விஹான் மல்ஹோத்ரா மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் தலா 69 ரன்கள் எடுத்தனர். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இது ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக அமைந்தது.
434 ரன்கள் இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு அமீரக அணி, 50 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 234 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
கடந்த 2002-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இளையோர் கிரிக்கெட்டில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு 177 ரன்கள் விளாசினார். இதுவே இந்த பிரிவில் இந்தியர் ஒருவர் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக அமைந்தது. அவருக்கு அடுத்ததாக இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக வைபவ் சூர்யவன்ஷியின் 171 ரன்கள் அமைந்துள்ளது.