வெளுத்து வாங்கும் கனமழை! 3 தென் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக 3 தென் தமிழக மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர். மூன்று மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதில், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 5 முதல் 15 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
தூத்துக்குடி மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு சென்னை மண்டல மையத்தால் 15.10.2025 முதல் 17.10.2025 வரை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மழைநீர் தேங்கக் கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அணைக்கட்டுகள் மற்றும் நீர் நிலைகளை அனைத்து துறை அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.