ஆணழகன் போட்டியில் நடுவர்களுக்கே 'டஃப்' கொடுத்த கிட்ஸ்..

ஆணழகன் போட்டியில் நடுவர்களுக்கே 'டஃப்' கொடுத்த கிட்ஸ்..

ஆணழகன் போட்டியில் பெரியவர்களுக்கு இணையாக, தன்னுடைய உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பள்ளி மாணவனை காவல் ஆய்வாளர் நேரில் சென்று வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'வேர்ல்ட் பிட்னெஸ் பெடரேஷன் தமிழ்நாடு' மற்றும் 'தமிழ்நாடு பிட்னெஸ் பாடிபில்டிங் அஸோஸியேஷன்' இணைந்து கடந்த 16ம் தேதி தி.நகரில் ஆணழகன் போட்டியை நடத்தியது. மொத்தம் 22 பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி அசத்தினர்.

அப்போது, பெரியவர்கள் மத்தியில் பள்ளி சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். சிறுவர்கள் பிரிவில் போட்டியிட்டவர்களை தேர்வு செய்வதில் நடுவர்களுக்கு குழப்பம் ஏற்படும் அளவிற்கு, அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த பவின் என்ற சிறுவன் பரிசை தட்டி சென்றது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சூழலில் பெரும்பாக்கம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பவின் சிறுவர் பிரிவில் பங்கேற்று பதக்கம் மற்றும் கோப்பையை தட்டிச் சென்ற நிலையில், அவருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இந்நிலையில், காவல்துறை சார்பில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் பவின் வீட்டிற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

அப்போது காவல் ஆய்வாளர் சண்முகம், '' பிள்ளைகள் இது போன்ற விளையாட்டு துறைகளில் அதிக அளவில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் காட்டினால், எந்தவித தவறான பாதைகளில் செல்ல மாட்டார்கள். அதே நேரம் படிப்பிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியும். சிறுவனின் தந்தைக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அவருக்கும் வாழ்த்துகள்'' என கூறினார். காவல் ஆய்வாளரின் வருகையால் வியப்பில் ஆழ்ந்த பவினின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று நன்றி தெரிவித்தனர்.