ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நடுவர் குழுவை அறிவித்த ஐசிசி; நான்கு இந்தியர்களுக்கு இடம்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 30 பேர் அடங்கிய நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதே சமயம் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி நடுவர்கள் மற்றும் கள நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 6 பேர் போட்டி நடுவர்களாகவும், 24 பேர் கள நடுவர்களாகவும் செயல்படவுள்ளனர். இதில் கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் லீக் போட்டியில் கள நடுவர்களாக இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா மற்றும் இங்கிலாந்தின் வெய்ன் நைட்ஸ் ஆகியோர் செயல்படவுள்ளனர்.
இதன் மூலம் வெய்ன் நைட்ஸ் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கள நடுவராக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் குமார் தர்மசேனா தன்னுடைய 37 ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் நடுவராக செயல்படவுள்ளார். இதில் அவர் 2016 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் நடுவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த நிதிஷ் மேனன், ஜெயராமன் மதனகோபால், பத்மநாபன் ஆகியோர் கள நடுவர்களாகவும், ஜகவல் ஸ்ரீநாத் போட்டி நடுவராகவும் செயல்படவுள்ளனர். இது தவிர இந்த நடுவர்கள் குழுவில் கிறிஸ் கேஃப்னி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ, ராட் டக்கர் உள்ளிட்ட பிரபல நடுவர்களும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி நடுவர்கள்: டீன் கோஸ்கர், டேவிட் கில்பர்ட், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜவகல் ஸ்ரீநாத்.
கள நடுவர்கள்: ரோலண்ட் பிளாக், கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, கிறிஸ் கேஃப்னி, அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ, வெய்ன் நைட்ஸ், டொனோவன் கோச், ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன், சாம் நோகஜ்ஸ்கி, கே.என்.ஏ.பத்மநாபன், அலாவுதீன் பலேக்கர், அஹ்சன் ராசா, லெஸ்லி ரீஃபர், பால் ரீஃபெல், லாங்டன் ருசேரே, ஷர்புத்தூலா இப்னே ஷாஹித், காசி சோஹெல், ராட் டக்கர், அலெக்ஸ் வார்ஃப், ரவீந்திர விமலசிறி, ஆசிப் யாகூப்.