ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக குமார் சங்கக்காரா நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக குமார் சங்கக்காரா நியமனம்

எதிவரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்திருந்தன. இதில் சில அணிகள் டிரேடிங் முறையிலும் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸின் டிரேடிங்

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு டிரெடிங் செய்துள்ளது. மேலும் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்துள்ளது.

மேற்கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிடில் ஆர்டர் பேட்டர் நிதிஷ் ரானாவை ரூ.4.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸுகு டிரேடிங் செய்துள்ளது. அதேசமயம், ஆகாஷ் மத்வால், அசோக் ஷர்மா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர், மகேஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா உள்ளிட்டோர் வீரர்களையும் அந்த அணி விடுவித்துள்ளது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிவரும் ஐபிஎல் மினி ஏலத்தில் 9 இடங்களுக்கான (ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட) தேடுதலில் இறங்கியுள்ளதுடன், கைவசம் ரூ.16.05 கோடியுடன் ஏலத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், தற்சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது.

அந்தவகையில், எதிவரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காராவை நியமித்துள்ளது. முன்னதாக கடந்த சீசனில் ராகுல் டிராவின் ராஜஸ்தான் ராயல்ஸின் பயிற்சியாளராக செயல்பட்டதுடன், வீரர்கள் ஏலத்திலும் பங்கேற்றிருந்ததார்.

ஆனால் அந்த சீசனில் ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லர், டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட வீரர்களை தக்கவைக்க தவறியதுடன், இந்திய ஸ்பின்னர்களுக்கான தேர்விலும் கோட்டைவிட்டது. அதன் விளைவாக கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் தவறைவிட்டிருந்தது.

மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரிடையே கருத்து வேறுபாடும் இருந்ததாக செய்திகள் வெளியாகின. அதன் காரணமாகவே சஞ்சு சாம்சம் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற விரும்பியதாகவும் கூறப்பட்டது. இதற்கு மத்தியில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ராயல்ஸ்

இந்த சூழ்நிலையில் தான் குமார் சங்கக்காரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் ராயல்ஸின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டதுடன், கிரிக்கெட் இயக்குநராகவும் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் குமார் சங்கக்காரா மீண்டும் பயிற்சியாளராக திரும்பியுள்ளதன் காரணமாக, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்ததன் காரணமாக அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்விகள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.