ஆஸ்திரேலிய ஓபன் 2026: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அல்காரஸ் சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் 2026: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அல்காரஸ் சாதனை

அலெக்சாண்டர் ஸ்வெரெவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 7-6, 6-7, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

அதே சமயம் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபாகினா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி, இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவை எதிர்த்து ரைபாகினா பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் தொடங்கிய இரண்டாம் செட் ஆட்டத்தில் ஸ்வெரெவ் கம்பேக் கொடுக்க, போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது.

இந்த செட்டில் ஸ்வெரெவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இறுதியில் அல்காரஸ் அபாரமாக விளையாடி 7-6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இதனால் இந்த போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் எளிதான வெற்றியை பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன. ஆனால் அதற்கு நேர் மாறாக மூன்றாவது செட்டில் ஸ்வெரெவ் அசத்தினார்.

மூன்றாவது செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்வெரெவ், நான்காவது செட்டிலும் மனம் தளராமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இருவரும் தலா 2 செட் களை கைப்பற்றி ஆட்டத்தை சமநிலை படுத்தியதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் விருந்தளித்தனர்.

பின்னர் நடைபெற்ற வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது செட் ஆட்டத்தில் இருவரும் தங்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி, அடுத்தடுத்து புள்ளிகளை வென்றனர். ஒரு கட்டத்தில் ஸ்வெரெவ் வெற்றியை நோக்கி சென்ற நிலையில், அல்காரஸ் சிறப்பான கம்பேக்கை கொடுத்து புள்ளிகளை வென்றார்.

இறுதியில் கார்லோஸ் அல்காரஸ் 7-5 என்ற கணக்கில் 5ஆவது செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 7-5, 6-7, 6-7 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி, முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னின்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்த்து, உலகின் இரண்டாம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸை எதிர்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.