டி20 தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? ஆஸி.யுடன் இன்று பலப்பரீட்சை!

டி20 தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? ஆஸி.யுடன் இன்று பலப்பரீட்சை!

 இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி, இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்சமயம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் ஆசிய கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்த தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த தொடரையும் கைப்பற்ற முயற்சி செய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி

மறுபக்கம் மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியில் விளையாடுகிறது. இருப்பினும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரண்டின் போட்டிகளின் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி தங்களுடைய ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 27 சர்வதேச டி20 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை தகவல்கள்

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையிலான இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியைக் காண முடியும். போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு 1.15 மணிக்கு நடைபெறும்.

இந்திய அணி: அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்),திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபோட்/சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குன்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்