விஜய் நெருக்கடிக்கு ஆளாகி பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்; திருமாவளவன் கணிப்பு

விஜய் நெருக்கடிக்கு ஆளாகி பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்; திருமாவளவன் கணிப்பு

பாஜக கொடுக்கும் நெருக்கடிக்கு ஆளாகி விஜய் கூட்டணியில் இடம் பெறுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கணித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது உருவான அதே கூட்டணி தான் இப்போது உருவாகி இருக்கிறது. அதில் இருந்த ஒரு சில கட்சிகள் தற்போது இடம் பெறவில்லை என்பது தான் உண்மை. அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்ற கட்சி தேமுதிக. தற்போது தேமுதிக இடம் பெறாத நிலையில் அது முழுமை அடையாத ஒரு கூட்டணி.

2021 தோல்வி கூட்டணி தமிழகத்தில் நிலவுகிறது. எனவே, அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. அதிமுக கூட்டணி என்று சொல்வதற்கு பதிலாக இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லுகிற அளவுக்கு அதிமுக பலவீனம் அடைந்திருக்கிறது.

திமுக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றாலும் கூட தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமையிலான கூட்டணியை திமுக கூட்டணி அல்லது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று தான் எல்லோரும் அழைக்கிறோம். ஜெயலலிதா இருந்திருந்தால் அப்படித்தான் பாஜகவினரை சொல்லி இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்களே இது தேசிய ஜனநாயக கூட்டணி என சொல்வதன் மூலம் பாஜக தலைமையில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று அவர் ஒப்புக்கொள்வதாக இருக்கிறது.

அந்த அளவிற்கு அதிமுக பலவீனம் அடைந்து இருப்பது இன்றைக்கு வெளிப்படையாக தெரிகிறது. எனவே அவர்கள் திமுக கூட்டணியை வெற்றி பெறுவதற்கு ஏதுவான கூறுகள் எதுவும் இல்லை. திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பது அவருடைய முயற்சியாக இருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெறப் போவதில்லை. 

அதிமுக எப்பொழுதும் திமுக எதிர்ப்புதான். அதிமுக உடைய உயிர் நாடி. ஆகவே திமுகவை அவர்கள் பாராட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. எதிர்த்து தான் பேசுவார்கள். அது பொருட்படுத்தக்கூடிய ஒன்று அல்ல. விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கேட்ட பொழுது சுயேச்சை சின்னங்களில் அது ஒரு சின்னம். சுயேச்சை சின்னம் பெற்றிருக்கின்றார்கள். கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சியில் எல்லாம் மறைமுகமாக பல்வேறு யுத்திகளை கையாண்டு மிரட்டி வருகிறது. அப்படி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யையும் பாஜகவினர் மறைமுகமாக அழுத்தம் தந்து அச்சுறுத்தி வருகின்றனர் என்று பலரும் யூகித்து சொல்லக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது. யாரும் அதை மறுக்க முடியாது. பாஜக கொடுக்கும் நெருக்கடிக்கு ஆளாகி விஜய் கூட்டணியில் இடம் பெறுவார். ஆனால் அவருடைய அரசியல் என்பது கேள்விக்குறியாகி விடும். விஜய் மட்டுமல்லாமல் விஜய்யுடன் இருக்கக்கூடிய நபர்களையும் விசாரணை என்ற பெயரில் பாஜகவினர் அச்சுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜன நாயகன் படம் வெளியாகாமல் இருப்பதற்கு பாஜக அரசியல் தலையீடு இருக்கின்றது என்றால் விஜய் வெளிப்படையாக பேசி இருக்க வேண்டும். ஆனால் அவர் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார். அவரை தடுப்பது எது? என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம் மட்டுமே நெருக்கடி தருகின்றதா? அல்லது பாஜகவும் சேர்ந்து நெருக்கடி தருகிறதா? என்று விஜய் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.

ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. பாஜகவையோ, மோடியோ எதிர்ப்பதற்கு தயாராக இல்லை. விஜய் அச்சப்படுகிறார் என்பது தெரிகிறது. இந்த அச்சம் ஏன்? என மக்களிடம் விஜய் தெளிவுப்படுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. விஜய் வெளிப்படையாக அதிகாரத்தில் பங்கு தருவார் என்று அறிவித்த பின்னரும் அவருடைய கட்சியில் சேர்வதற்கு தயங்குகிறார்கள் என்றால் அரசியல் களத்தின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் விஜய்யிடம் ஒரு மாயை உருவாக்கி வருகிறார்கள். யாருடைய துணையும் இல்லாமல் எந்தக் கட்சியும் வெற்றி பெற்றிட முடியும். ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதை போன்றதொரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று திருமாவளவன் கூறினார்