யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மரியாதை செலுத்தினார். அடுத்து விஜயகாந்த் சிலை அருகே சென்று வணங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பெண் அதிகாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். மேலாளராக இருந்த ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால், சாதாரண வேலை செய்யும் மற்ற பெண்களின் நிலை என்னவாக இருக்கும். அந்த ஊழியருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

அவரிடம் வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “யாருடன் கூட்டணி என்பதை பத்திரிக்கையாளர்களை அழைத்து விரைவில் அறிவிப்பேன். ஆனால் அதற்குள் நான் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. யார் இது போன்ற தவறான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுப்பது என்பது தெரியவில்லை. இது போன்ற செய்திகளால் பலரும் குழப்பம் அடைகிறார்கள். எனவே கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்” என்றார்.

அவரிடம் தமிழகம் வருகிற பிரதமரை சந்திக்கவுள்ளீர்களா? என்று கேட்டதற்கு, “23ஆம் தேதி பிரதமர் வருகிறார் என்பதையே தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அவர் எதற்காக வருகிறார் என்பது கூட முழுமையாக தெரியவில்லை. மற்றபடி அவர் வருவதற்கு முன்பதாக கூட்டணி தொடர்பாக பேச வேண்டும் என இதுவரை யாரும் கேட்கவில்லை” என்றார்.

தொடர்ந்து கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா, “நான்காம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் இருக்கிறது. அதை முடித்த பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ஊடகத்தினரிடம் அறிவிப்பேன். இது குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகளிடமும், யாருடன் கூட்டணி வைக்கவுள்ளோமோ அந்த கட்சி தலைமையுடனும் பேசிய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும். தே.ஜ கூட்டணி சார்பில் இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை” என்று பதிலளித்தார்.