அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்-ஸின் தீவிர ஆதரவாளருமாக இருந்த கு.ப.கிருஷ்ணன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு அருகே பூஞ்சேரியில் தவெக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, விஜய் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தவெக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயமாக நடக்கும் என்றார்.
மேலும் இன்றைய அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை மறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
யார் இந்த கு.ப.கிருஷ்ணன்?
அதிமுகவின் தொடக்க காலத்திலிருந்தே கட்சியில் இயங்கி வந்தவர். ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1991 - 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.|
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழர் பூமி என கட்சியை தொடங்கி, திமுக கூட்டணியில் இணைந்தார். பின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பக்கம் நின்று, அவரது தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.
த.வெ.க.வில் இணைந்த மற்றொரு ஓபிஎஸ் ஆதரவாளர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகரும் த.வெ.க.வில் இணைந்த நிலையில், அதிருப்தியில் இருந்த கு.ப.கிருஷ்ணனும் தவெகவில் இணைந்துள்ளார்.