தமிழ்நாட்டின் பொருளாதாரம் 16% வளர்ச்சி - தங்கம் தென்னரசு பெருமிதம்
2023-24 நிதியாண்டை ஒப்பிடும்போது, 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 16% வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமித்துடன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தமிழக முதலமைச்சரின் முன்னெடுப்புகளால் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி இன்றைக்கு சிறப்பானதொரு உச்சத்தை தொட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் 26.88 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 2024 -25 நிதியாண்டில் 31.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 16% வளர்ச்சியை இன்றைக்கு அடைந்திருக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படியே இந்த உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த வளர்ச்சியிலே உற்பத்தி துறை மிகப்பெரிய பங்களிப்பினை செய்திருக்கிறது," என்றார்.
மேலும் பேசிய அவர், " தமிழ்நாட்டில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 27.7 லட்சம் பேர் பணிபுரியும் நிலை உருவாகி உள்ளது. இதேபோன்று கட்டுமான துறை, சேவைத் துறை உள்ளிட்டவையும் மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன.
1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் எட்ட வேண்டும் என்று சொன்னால் ஏற்றுமதியிலே நாம் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை காண வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு நமது முதலமைச்சர் பல்வேறு உலக நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இவற்றின் வாயிலாக ஏறத்தாழ 11 லட்சத்து 40,731 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டு ஏறத்தாழ 3,48,522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை கொண்டு வந்திருக்கிறோம்," என்றார்.
அத்துடன், "100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60%, மாநில அரசு 40% என்று இருக்கும் நிலையில், தமது பங்களிப்பை மத்திய அரசு முறையாக தராததால் தமிழக அரசின் நிதிச்சுமை கூடுகிறது. இதேபோன்று பல்வேறு திட்டங்களுக்கான நிதி பங்களிப்பை மத்திய அரசு தராததால் தமிழக அரசின் நிதிச் சுமை அதிகமாகி கொண்டே போகிறது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.