மூன்றாவது டி20: அபிஷேக், சூர்யா அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய் ஆகியோரும், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசனுக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான டிம் செஃபெர்ட்டும் 12 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் மற்றும் மார்க் சாப்மேன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்கப்பட்ட மார்க் சாப்மேன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் அபிஷேக் சர்மாவுடன் இணைந்த இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 28 ரன்களை சேர்த்த நிலையில் இஷான் கிஷான் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபிஷேக் சர்மா 14 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்ய, மறுமுனையில் சூர்யாவும் தனது அரைசதத்தை பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் சர்மா 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 68 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 57 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி ஜனவரி 28ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.