எஸ்ஐஆர் பணிகள் குறித்து பழனிசாமியுடன் ஆலோசனை: கே.பி.ராமலிங்கம் தகவல்
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் இல்லத்தில் அவரை பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: தாம்பரம் பகுதியில் ஒரே வீட்டில் 150 ஓட்டுகள், மற்றொரு வீட்டில் 161 ஓட்டுகள் என வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. எஸ்ஐஆர் பணியின் அவசியத்தை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் எஸ்ஐஆர் பணி மூலம் புலம்பெயர்ந்தவர்களின் பெயர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க முடியும்.
பிஹார் தேர்தலில் தோல்விக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எஸ்ஐஆர்-ஐ குறை கூறின. அதைப்போல, வரும் தேர்தலில் திமுக-வை மக்கள் புறக்கணிக்க முடிவெடுத்து விட்டதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட முதல்வர் எஸ்ஐஆர்-ஐ தொடர்ந்து குறை கூறி வருகிறார். பாஜக மற்றும் அதிமுகவினர் எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்துள்ளேன். இரண்டு கட்சியினரும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்வார்கள்.