மலையாளத்தில் அறிமுகமாகிறார் துஷாரா விஜயன்!
உன்னி முகுந்தன் நடித்து வெற்றி பெற்ற ‘மார்கோ’ படத்தைத் தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’. இதை பால் ஜார்ஜ் இயக்குகிறார். இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். அதிரடி ஆக் ஷன், த்ரில்லர் படமான இது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் உருவாகிறது.
இதன் ஆக் ஷன் காட்சிகள் படப்பிடிப்பு தாய்லாந்தில் சமீபத்தில் நடந்தது. புகழ் பெற்ற தாய்லாந்து படமான ‘ஓங்க்- பேக்’ படத்தின் ஆக் ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவருடைய குழுவினர் இதில் பணியாற்றினர்.
இந்நிலையில் துஷாரா விஜயன் இப்படத்தில் இணைந்துள்ள தாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் மூலம் அவர் மலையாளத்தில் அறிமுகமாகிறார். தமிழில், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் துஷாரா விஜயன்.