‘அகண்டா 2’ ரிலீஸ் திடீர் நிறுத்தம் ஏன்?
தெலுங்கு சினிமாவின் பிரபல மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா, 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘அகண்டா 2’. போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா, பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் நடக்க இருந்த ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி ‘அகண்டா 2’ வெளியாகாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் படத்தைத் தயாரித்த 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் தயாரித்த படங்கள்மூலம் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ரூ.28 கோடியைச் செலுத்த வேண்டியுள்ளது. அதைக் கொடுத்துவிட்டுப் படத்தை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈராஸ் தொடுத்த வழக்கில் படத்துக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இதனால் ‘அகண்டா 2’ ரிலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் ஹீரோ பாலகிருஷ்ணா தனக்குத் தயாரிப் பாளர் கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக ரூ.7 கோடியையும் இயக்குநர்போயபதி ரூ.4 கோடியையும் விட்டுக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.