தெருநாய்கள் விவகாரம்: கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. தற்போது இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை அப்புறப்படுத்துவதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ்வாறு அப்புறப்படுத்தப்படும் தெருநாய்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காப்பகங்களுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அன்றாடம் மக்கள் அதிகம் வந்து செல்லும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், நாடு முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சினிமா நடிகர், நடிகைகள், விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் அமர்வில் இருந்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.