டெல்லியில் ‘ஆபத்தான’ நிலையில் காற்று மாசு! அலுவலக நேரம் பற்றி அரசு எடுத்த அதிரடி முடிவு

டெல்லியில் ‘ஆபத்தான’ நிலையில் காற்று மாசு! அலுவலக நேரம் பற்றி அரசு எடுத்த அதிரடி முடிவு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் இன்று காலை AQI 655 என்ற ‘ஆபத்தான’ நிலையை தொட்டிருக்கிறது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. வாகனங்களின் புகை, தொழிற்சாலைகள், மருந்து கழிவுகள் எரிப்பு மற்றும் அண்டை மாநிலங்களில் வைக்கோல்களை கொளுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, சுவாசம் தொடர்பான நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் மோசமான சூழ்நிலையை சரி செய்யும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அங்கு பெரிதளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த ஆண்டு தீபாவளிக்கு தலைநகரில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கியது. அதன் பின்விளைவுகளை கடந்த ஓரிரு வாரங்களாக சந்தித்து வருகிறது.

மாசு அடர்த்தியை குறைப்பதற்காக, செயற்கை மழையை பொழியச் செய்ய எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்த ஒரு சில நாட்களாக காற்றின் மாசு அளவு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவ.8) காலை 7.15 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 655 ஆக பதிவாகி இருக்கிறது. இது மிகவும் ‘ஆபத்தான’ நிலை என்று சொல்லப்படுகிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை கீழ்க்கண்டவாறு வகைபடுத்தி இருக்கிறது. அதன்படி, 0 முதல் 50 வரையிலான AQI, ‘நல்லது’ என்றும், 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’ என்றும், 101 முதல் 200 வரை, ‘மிதமானது’ என்றும், 301 முதல் 400 வரை, ‘மோசமானது’ என்றும், 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்றும், 500-க்கும் மேல் சென்று விட்டால் அது ‘ஆபத்தானது’ என்றும் வகைபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் AQI ‘ஆபத்தானது’ என்ற நிலையிலேயே 655 என்ற அளவில் உச்சத்தில் இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் அதிகரித்திருக்கும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு டெல்லியில் அரசு மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் பிப்ரவரி 15 வரை வேலை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்கள் இனி மேல் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் செயல்பட்டு வந்த டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் இனிமேல் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு அலுவலங்களுக்கும் இடையே 30 நிமிட நேர இடைவெளி மட்டுமே இருந்ததால் டெல்லியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதனால் காற்று மாசுபாடு அதிகரித்தது. எனவே மாசுபாட்டை கட்டுபடுத்தும் விதமாகவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நவம்பர் 15 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை டெல்லியில் காற்று மாசு அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு செயல்படுகிற அலுவலகங்களுக்கு அரசு புதிய நேரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும், போக்குவரத்து மற்றும் மாசு அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், மாசுபாட்டை குறைக்கவும், மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.