ஓராண்டுக்கும் மேல் வயிற்றில் கத்தரிக்கோல்... அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்

ஓராண்டுக்கும் மேல் வயிற்றில் கத்தரிக்கோல்... அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்

இளம்பெண் ஒருவர், மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலை சுமந்து வந்த நிலையில், அதை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் மோதிஹாரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மோதிஹாரியை சேர்ந்தவர் மணிபூஷன் குமார். இவரது மனைவி உஷா தேவி (25), ஒரு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் சங்கீதா குமாரி செய்திருந்திருந்தார். அப்போது அவர் உஷா தேவியின் வயிற்றுக்குள் ஒரு கத்திரிக்கோலை வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவரின் அலட்சியம் குறித்து எதுவும் தெரியாத உஷா தேவியும் அவரது குடும்பத்தினரும், வீட்டிற்குச் சென்று விட்டனர். ஆனால், சில நாட்களிலேயே உஷா தேவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. அந்த கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கிருந்த மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர். அதில் எதுவும் தெரியவில்லை. உஷா தேவிக்கு சில வலி நிவாரண மாத்திரைகள் மட்டும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், மீண்டும் சில நாட்களிலேயே உஷா தேவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. பின்னர் மீண்டும் பல அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது சாதாரண வலி தான் எனக் கூறி மாத்திரைகள் கொடுத்து மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இப்படியாக வயிற்றில் வலி வருவதும், மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகளுடன் திரும்புவதுமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓடி விட்டன.

இந்நிலையில், அண்மையில் வயிற்றில் தாங்க முடியாத அளவுக்கு வலி அதிகமாகி, உஷா தேவி துடிதுடித்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் டாக்டர் கமலேஷ் குமார் என்பவரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் கமலேஷ் குமார், சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, உஷா தேவியின் வயிற்றில் ஒரு கத்திரிக்கோல் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, டாக்டர் கலமஷ் குமார், வலியால் அவதிப்பட்டு வந்த உஷா தேவியின் குடும்பத்தினரை அழைத்து, அவரை வேறொரு பெரிய மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தார். அங்கு சென்றவுடன், உஷா தேவிக்கு மருத்துவர்கள் கத்திரிக்கோலை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிவதற்குள் உஷா தேவி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், உஷா தேவியின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் அவரது குடலை கிழித்து, ஒரு மிகப் பெரிய தொற்றை ஏற்படுத்தியதாகவும், அதுவே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து கேள்விப்பட்ட மோதிஹாரி கிராம மக்கள் கொந்தளித்தனர். உஷா தேவிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சங்கீதா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், டாக்டர் சங்கீதாவின் மருத்துவமனையின் முன்பு உஷா தேவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ​​உஷா தேவியின் மைத்துனர் திரிலோகிநாத் குமார், "இது மருத்துவரின் மிகப் பெரிய அலட்சியம். அறுவை சிகிச்சையின் போது கத்தரிக்கோல் எப்படி உள்ளே வைக்கப்பட்டது? ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு சோதனைகள் செய்து வந்தோம். ஆனால் யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. இன்று, ஒன்றரை வயதுக் குழந்தை தன் தாயை இழந்து விட்டது. குற்றவாளிகளான மருத்துவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

மேலும், உஷாதேவியின் கணவர் மணிபூஷன் குமார் கூறுகையில், "நாங்கள் ஏழைகள். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் விரைந்து வந்த ஜிட்னா காவல் துறையினர், உஷா தேவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜிட்னா காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், "பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதில், பெண் மருத்துவரின் கவனக்குறைவு பற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், உஷாதேவிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் கோப்புகளை ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.