“திரையில் நடித்த விஜய் அரசியலில் மோடியுடன் இணைந்து நடிக்கிறார்” - சபாநாயகர் அப்பாவு
திரையில் நடித்த விஜய் அரசியலில் மோடியுடன் இணைந்து நடித்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் 128 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 29 அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் பயிலும் 9 ஆயிரத்து 703 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக இன்று 27 தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 2480 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மறைவிற்கு சபாநாயகர் என்ற முறையில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்திருந்தார்.அதன் முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் 9,703 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று நெல்லை மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக 2,480 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த மடிக்கணினியை தங்கள் வேலைவாய்ப்புக்கும், உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்த வேண்டும். இதில் ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றை பார்த்தாலும் அது நீர்க்குமிழி போன்றது நம்பிக்கையற்றது காணமல் போய்விடும் எனவே மாணவர்கள் இதனை கடந்து சென்றுவிட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்எல்ஏக்கள் கொண்ட சபையில், மரபுப்படி தயாரித்துக் கொடுத்த உரையை வாசிப்பதுதான் ஆளுநரின் கடமை (To read, not to speak). ஆனால், அவர் அதைச் செய்யாமல் வெளியேறியது மரபல்ல.
ஆளுநரின் நடவடிக்கை தனிப்பட்ட முடிவல்ல, அவர் யாரோ ஒருவரின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்கிறார், டிடிவி தினகரன் இட ஒதுக்கீட்டை எதிர்கிறார், எடப்பாடி பழனிசாமியால் என்ன செய்ய முடியும், இந்தக் கூட்டணி ஓர் ஒவ்வாத கூட்டணியாகும்.
வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஒவைசியை பாஜக பயன்படுத்துவது போல, தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யைப் பயன்படுத்துகிறது பாஜக. விஜய்யும் - மோடியும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தும் நாடகம் தான் இது, திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலில் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறார் என கூறினார்.