கோவையின் புதிய அடையாளம்: ஜி.டி. நாயுடு பெயரில் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் திறப்பு- ஸ்டாலின் பெருமிதம்

கோவையின் புதிய அடையாளம்: ஜி.டி. நாயுடு பெயரில் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் திறப்பு- ஸ்டாலின் பெருமிதம்

இதுவரை மதுரையில் உள்ள நத்தம் மேம்பாலமே 7.3 கி.மீ. நீளத்துடன் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக இருந்தது. தற்போது, அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 10.1 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.

இதுவரை மதுரையில் உள்ள நத்தம் மேம்பாலமே 7.3 கி.மீ. நீளத்துடன் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக இருந்தது. தற்போது, அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 10.1 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.

இதன் மூலம், இது தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது. மேலும், இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரை வழி மேம்பாலம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்ல பொதுவாக கோல்டு வின்ஸ், உப்பிலிபாளையம், லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், கொடிசியா ஆகிய சந்திப்புகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் சுமார் 45 நிமிடங்கள் ஆகும்.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை இனி வெறும் 10 நிமிடங்களில் கடக்க முடியும்.

இந்த மேம்பாலம் நகரில் இருந்து விமான நிலையம் செல்ல மட்டுமின்றி, சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகளுக்குச் செல்வதையும் விரைவுபடுத்தும்.

இந்த மேம்பாலம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 'ஃப்ரீ காஸ்ட்' (Pre-cast) முறையில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் சுமார் 4.90 ஏக்கர் நிலம் ₹228 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டது. பணிகள் 2020-ல் தொடங்கின.

பல்லடுக்குச் சாலை: இந்த உயர்மட்ட மேம்பாலம் நான்கு வழித்தடமாகவும், தரை வழிச் சாலை ஆறு வழித்தடங்களுடன் விரிவுபடுத்தப்பட்டும் என மொத்தம் பத்து வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்: மேம்பாலத்தில் கோயம்புத்தூர் விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை ஆகிய நான்கு இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் (Ramps) அமைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் சேகரிப்பு: தமிழ்நாட்டில் முதல் முறையாக, இந்தப் பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு: பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் ரோலர் தடுப்புக் கருவிகள் (Roller Barriers) போன்ற உலகத் தரமான பாதுகாப்பு வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

பாலத்தைத் திறந்துவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் காரில் பயணித்தபடி அதன் கட்டுமானங்களைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஜி.டி. நாயுடு குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய ஜி. டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், "தந்தை பெயரில் பாலம் திறக்கப்பட்டது மிகவும் பெருமையாக உள்ளது. எதிர்பாராதவிதமாக ஸ்டாலின் அவர்களே இதற்குப் பெயர் சூட்டியுள்ளார். கோவை மாநகரத்திற்கு இந்த பாலம் ஆயிரம் வருடங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பாலம் கோவையின் பெருமை. பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் விமான நிலையத்தை எளிதில் அடைய முடியாது. ஆனால், கோவையில் 15 நிமிடங்களில் சென்றடைய முடியும். இது தொழில்முனைவோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்," என்று கூறி கோவையின் வளர்ச்சி அபாரமானது எனப் பெருமிதம் தெரிவித்தார்.