ரிஷாத் ஹோசைன் சுழலில் வீழ்ந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
மிர்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்தேச அணி 49.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தவூஹித் ஹிர்டோய் 90 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், மஹிதுல் இஸ்லாம் அன்கோன் 76 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
208 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 39 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 44, அலிக் அத்தானஸ் 27, கேப்டன் ஷாய் ஹோப் 15, ஜஸ்டின் கிரீவ்ஸ் 12 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. ஒரு கட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் மேற்கொண்டு 54 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 9 விக்கெட்களையும் கொத்தாக தாரைவார்த்தது. வங்கதேச அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளரான ரிஷாத் ஹோசைன் 9 ஓவர்களை வீசி 35 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி இதே மைதானத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.