ஆலன் பார்டர், ராகுல் டிராவிட்டை முந்திய ஸ்டீவ் ஸ்மித்

steve-smith-surpasses-allen-border-and-rahul-dravid-records

ஆலன் பார்டர், ராகுல் டிராவிட்டை முந்திய ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 42 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 132 ரன்களில் சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பிய நிலையிலும், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2010ஆம் ஆண்டிற்கு பிறகு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய முதல் டெஸ்ட் வெற்றியையும் பதிவு செய்துள்ளார். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

ஆலன் பார்டரை முந்திய ஸ்மித்

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சில சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில், இன்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களைச் சேர்த்ததன் மூலம், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

முன்னதாக இப்பட்டியலில் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் 47 டெஸ்ட் போட்டிகளில் 3548 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில் தற்சமயம் ஸ்டீவ் ஸ்மித் 3,553 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இப்பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 37 போட்டிகளில் 5,028 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட் சாதனை முறியடிப்பு

இது தவிர, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்சுகளை பிடித்திருந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்சுகளைப் பிடித்த ஃபீல்டர்கள் பட்டியலிலும் அவர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தலா 210 கேட்சுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், தற்போது ஸ்டீவ் ஸ்மித் 212 கேட்சுகளைப் பிடித்து அந்த பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியளில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 16 கேட்சுகளைப் பிடித்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மேலும் ஒரு போட்டி நடைபெற உள்ளதால், அப்போட்டியின் முடிவில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.