பேட்டர்களை மட்டும் வைத்து போட்டியை வெற்றி பெற முடியாது - இந்திய அணியை விமர்சித்த ஆரோன் ஃபிஞ்ச்!

பேட்டர்களை மட்டும் வைத்து போட்டியை வெற்றி பெற முடியாது - இந்திய அணியை விமர்சித்த ஆரோன் ஃபிஞ்ச்!

இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி, வெறும் 13.2 ஓவர்களில் இலக்கை அடைந்து போட்டியை எளிதாக வென்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி இந்த டி20 தொடரில் 1-0 என முன்னிலையும் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்றாவது டி20 போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

அர்ஷ்தீப் சிங் (IANS)

இதுகுறித்து பேசிய அவர், "இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அர்ஷ்தீப் சிங் நிச்சயமாக அணியின் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த போட்டியிலாவது அவருக்கு இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதேசமயம் பேட்டர்களை மட்டும் வைத்து போட்டியை வெற்றி பெற முடியாது என்பதை மனதில் வைக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அணி கூடுதல் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது. இவை அனைத்தும் உலகக் கோப்பைக்கானது என்றாலும், பந்துவீச்சுத் துறையும் மிக முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய போட்டியை வெல்ல, பேட்டிங் மட்டும் போதாது. சரியான கலவையுடன் நீங்கள் களத்தில் இறங்க வேண்டும். ஒருவேளை இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னும் அதிக ரன்களை எடுத்திருந்தால், போட்டியின் நிலை வெறு மாதியாக இருந்திருக்கும்" என்றார்.

அபிஷேக் சர்மா (IANS)

தொடர்ந்து, "நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்டார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், அவர் தனது சொந்த பாணியில் ஆக்ரோஷமாக விளையாடினார். அவர் முதலில் விளையாடும் போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை எதிர்கொண்டனர். இருப்பினும் நாதன் எல்லிஸ் அவரது ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். இல்லையெனில், இந்தியா அணி இன்னும் சில ரன்கள் எடுத்திருக்கும். அப்போது ஆஸ்திரேலிய அணியானது இலக்கை எட்டுவது கடினமாகி இருக்கும்" என்று தெரிவித்தார்.

இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்தார், ஹர்ஷித் ராணா 35 ரன்கள் எடுத்தார். வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் டி20 தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது.