ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் - ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான போட்டி கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 173 ரன்களும், சாஹில் ராஜ் 77 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. பாலசுப்ரமணியன் சச்சின் 0, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 3, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 9, ஆந்த்ரே சித்தார்த் 2, பாபா இந்திரஜித் 0 ரன்களில் நடையை கட்டினர். அம்ப்ரிஷ் ரன் ஏதும் எடுக்காமலும், ஷாருக் கான் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 50.4 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. ஷாருக் கான் 5, அம்ப்ரிஷ் 28, குர்ஜப்னீத் சிங் 12, சந்திரசேகர் 9, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 14 ரன்களில் நடையை கட்டினர். ஜார்க்கண்ட் அணி தரப்பில் ஜத்தின் பாண்டே 5, சாஹில் ராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
பாலோ-ஆன் பெற்ற தமிழக 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அம்ப்ரிஷ் 15, நாராயண் ஜெகதீசன் 21, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8 ரன்களில் நடையை கட்டினர். ஆந்த்ரே சித்தார்த் 3, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி.