இந்திய அணி தேர்வுக் குழுவின் பரிசோதனை எலியா சஞ்சு சாம்சன்?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சஞ்சு சாம்சனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இவர், சமீப காலமாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். குறிப்பாக இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அபாரமாக விளையாடிய சாம்சன் அடுத்தடுத்து மூன்று சாதங்களையும் விளாசி, அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் தந்தை டெல்லியில் காவலராக பணியாற்றி வந்ததன் காரணமாக, சஞ்சு தனது ஆரம்ப கால கிரிக்கெட்டை டெல்லியில் தொடங்கினார். இருப்பினும் அவரால் துருவ் பண்டோவ் கோப்பை என்றழைக்கப்படும் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறமுடியவில்லை. இதனையடுத்து சஞ்சுவின் தந்தை டெல்லி காவல்துறையில் இருந்து தன்னார்வ ஓய்வு பெற்றதையடுத்து, அவர்கள் குடும்பத்தோடு கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். அதன்பின் சஞ்சு சாம்சன் கேரளா அண்டர்13 அணியில் தேர்வு செய்யப்பட்டு தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கேரளா அண்டர்16 அணியில் இடம் பெற்றதுடன், கோவா அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதத்தையும் விளாசி தனது திறனை உலகறியச் செய்தார். அதன்பின் கேரளாவிற்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட தகுதிபெற்ற சஞ்சு சாம்சன், தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்களிலும் கேரளாவிற்காக விளையாடி தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தியதுடன், பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் கேரளாவிற்காக அதிக ரன்களைக் குவித்த டாப் 3 வீரர்கள் பட்டியலிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவந்த சஞ்சு சாம்சனுக்கு, 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 2012ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சஞ்சுவுக்கு, அந்த சீசனில் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் அடுத்த சீசனுக்கு முன்னதாக கேகேஆர் அணி அவரை விடுவித்த நிலையில், 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் அத்தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தனது அறிமுகத்தையும் பெற்றிருந்தார்.
தனது அறிமுக ஆட்டத்தில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காவிட்டாலும், இரண்டாவது ஆட்டத்தில் அரைசதம் கடந்ததுடன் 63 ரன்களையும் சேர்த்து மிரட்டினார். இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்ததுடன், அந்த சீசனில் மட்டும் 10 இன்னிங்ஸில் 206 ரன்களையும், 6 ஸ்டம்பிங்களையும் செய்து வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்று அசத்தினார். அதன்பின் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்திலேயே அவர் அரைசதம் கடந்து, அத்தொடரில் அரைசதம் விளாசிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சனுக்கு, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. இருப்பினும் அத்தொடரில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அத்தொடர் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான 30பேர் அடங்கிய முதற்கட்ட இந்திய அணியில் சஞ்சுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் அவரால் இறுதிக்கட்ட அணியில் தேர்வாகமுடியவில்லை. இவ்வாறு சர்வதேச அறிமுகத்திற்காக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கும், கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. தனது அறிமுக ஆட்டத்தில் 19 ரன்களைச் சேர்த்த சஞ்சு சாம்சனுக்கு, அதன்பின் கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார். இறுதில் 2019ஆம் ஆண்டு வங்கதேச டி20 தொடரின் மூலம் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையிலும், பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஒருபக்கம் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வென்றார். இதனால் ஒவ்வொரு தொடரின் போதும் சஞ்சு சாம்சனின் பெயர் இந்திய அணியில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இருப்பினும் அதுகுறித்து கவலை கொள்ளாத சஞ்சு, தனது அதிரடியான பேட்டிங்கை மட்டுமே வெளிப்படுத்தி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
அதிலும் குறிப்பாக 2017ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசி அசத்தினார். அதனைத்தொடர்ந்து அடுத்த சீசனில் மீண்டும் ராஜஸ்தான் ரயால்ஸுக்கு திரும்பிய அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை விளாசியதுடன், இந்திய அணி தேர்வாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் கேள்விக்கேட்டார்.
இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் அவ்வபோது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவரால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் சஞ்சு மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை கேப்டனாக நியமித்திருந்தது. அந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சதம் விளாசியதுடன், ஐபிஎல் தொடரில் புதிய சாதனையையும் படைத்தார். மேலும் அத்தொடரில் அவர் 14 போட்டிகளில் விளையாடி 484 ரன்களையும் குவித்திருந்தார்.
இதன் மூலம் அவருக்கு இலங்கை தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில அறிமுகமான அவர், 46 ரன்களைச் சேர்த்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு டி20 தொடரிலும் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக, 2021ஆம் ஆண்டு ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தனது இடத்தை தவறவிட்டார்.
இந்திய அணியில் பெரிதளவில் சோபிக்க தவறிய சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியை திறம்பட வழிநடத்திய அவர், இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றிருந்தார். இருப்பினும் அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஆனால் அந்த ஐபிஎல் தொடரின் மூலம் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் விளையாட மற்றொரு வாய்ப்பானது கிடைத்தது. ஆனால் இந்த முறை தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சஞ்சு, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் தனது முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். மேற்கொண்டு ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கும் தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 46 ரன்களையும், 3 கேட்சுகளையும் பிடித்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டநாயகன் விருதை வென்று ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்திய சாம்சன் ஒரு அரைசதம், இரண்டு போட்டிகளில் நாட் அவுட் என்று தொடரை சிறப்பாக முடித்திருந்தார்.
இருப்பினும் அவருக்கு 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அதன்பின் அவரது செயல்பாடுகளிலும் தோய்வு ஏற்படத் தொடங்கியது. ஏனெனில் ஒருபக்கம் ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி வந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனாலும் அவரது ஒருநாள் செயல்பாடுகள் அற்புதமாக இருந்த காரணத்தால், 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் நிச்சயம் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அத்தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை பிசிசிஐ முன்னிலைப் படுத்தியது. மேலும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கூடுதல் வீரர்கள் பட்டியலில் சஞ்சு இடம்பெற்றிருந்த போதிலும், ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்தார். இது தேர்வு குழு மீதான விமர்சனங்களை அதிகரிக்க செய்தது. அதுமட்டுமில்லாமல், அவருக்கு மாற்றாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகளும் அவ்வளவு சிறப்பாக இல்லாததுடன், அந்த உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறிய நிலையிலும், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.
அதன்பின் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்ட சஞ்சு, 5 அரைசதங்களை விளாசியதுடன், 531 ரன்களையும் குவித்து அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அபார ஆட்டத்தை தொடர்ந்த சஞ்சு, தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்ததுடன் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களையும் விளாசி 107 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் இரண்டு சர்வதேச டி20 சதங்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் சஞ்சு படைத்தார். அத்துடன் நிற்காத அவர், அடுத்து நடைபெற்ற நான்காவது டி20 போட்டியிலும் சதம் விளாசி, ஒரே ஆண்டில் மூன்று சர்வதேச டி20 சதங்களை விளாசிய உலகின் முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
இவ்வாறு டி20 கிரிக்கெட்டில் ருத்ரதாண்டவமாடி வந்த சஞ்சு, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர் பெரும் சோதனையாக அமைந்தது. அத்தொடரில் அவர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதுடன், கடைசி போட்டியின் போது காயத்தையும் சந்தித்தார். இதனால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெறவில்லை. மேலும், ஐபிஎல் தொடரிலும் அவரால் 9 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அதன்பின் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
ஆனால் இம்முறை சஞ்சுவுக்கு மற்றொரு வழியில் தேர்வு குழுவினர் செக் வைத்தனர். ஆம், ஆசிய கோப்பை தொடருக்கான இந்த டி20 அணியின் புதிய துணைக்கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமித்தனர். இதன் காரணமாக, சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் இடமானது கேள்விக்குறியானது. மாறாக அவர் பெரிதளவில் சோபிக்க தவறிய 5ஆவது இடத்திலேயே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் காரணமாக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதுவும், அப்போட்டியில் அவர் வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் இடத்தில் களமிறக்கப்பட்டு, 2 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இதனால், உடனடியாக அடுத்த போட்டியிலேயே அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டதுடன், ஜித்தேஷ் சர்மாவுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு தேர்வாளர்களால் உள்ளே, வெளியே என விளையாடப்பட்ட சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது. அப்போது, சிறிதும் தயக்கமில்லாமல் பேசிய அவர், "என்னை 9ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய கூறினாலும் அல்லது இடது கை சுழற்பந்து வீச்சாளர் மாதிரி பவுலிங் செய்ய சொன்னாலும், இந்திய அணிக்கு அது தேவை என்றால் நிச்சயம் செய்வேன். சமீபத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தேன். ஆனால் அதில் மொத்தமாக 40 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. எண்கள் என்ன கூறுகிறது என்பதை விட நான் தற்போது இருக்கும் நிலையை எண்ணி பெருமைப்படுகிறேன். மேலும் நான் கடந்து வந்த சவால்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் 51 டி20 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 3 அரைசதங்கள் என 995 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 510 ரன்களையும் எடுத்துள்ளார். இதுதவிர ஐபிஎல் தொடரில் 177 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 26 அரைசதங்களுடன் 4,704 ரன்களையும் குவித்துள்ளார். இதில் அவர் கடந்த மூன்று சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது