‘பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்’ - தோல்வி குறித்து ஷுப்மன் கில்

ஆஸ்திரேலிய அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.
அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பியது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினார். இந்திய அணி 8.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோஹித், ஷுப்மன் கில் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. டிஎல்எஸ் முறையில் 26 ஓவர்களாக ஆட்டம் மாற்றப்பட்டது. மழை குறுக்கீடு இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்ஸை சவாலாக அமைந்தது. அக்சர் படேல் 31, கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தனர். 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது இந்தியா.
டிஎல்எஸ் முறையில் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆட்டம் முடிந்த பிறகு தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது:
“பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது, பிறகு ஆட்டத்தில் மழை குறுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் கேட்ச்-அப் கேம் விளையாட வேண்டி இருக்கும். இந்த ஆட்டத்தில் இருந்து சில விஷயங்களை அறிந்து கொண்டோம். 130 ரன்களை டிபென்ட் செய்த போது இறுதி ஓவர்கள் வரை இல்லை என்றாலும் கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்றோம். அது எங்களுக்கு திருப்தி அளித்தது. இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. இது அடிலெய்ட் மைதானத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று ஷுப்மன் கில் தெரிவித்தார்.