அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை - வீரவணக்க நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்
அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளையொட்டி முதலமைச்சர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இந்தி திணிப்புக்கு எதிராக 1960-70-களில் தமிழ்நாடு முழுவதும் பெரியளவில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டத்தை ஒடுக்க காவல்துறையும், ராணுவமும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்தனர்.
தமிழ் மொழியை காக்க தங்கள் இன்னுயிரை நீத்தவர்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் இன்றைய தினம் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இயக்க ஆர்வலர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில், இன்று மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளையொட்டி காலையிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
தொடர்ந்து குரல் கொடுக்கும் ஸ்டாலின்
இந்தி திணிப்புக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைமையில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் குரல் கொடுத்திருந்தார்.
"இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்தி வரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளை கடந்து மராட்டியத்திலும் இப்போது சூறாவளியாக சுழன்றடித்து கொண்டிருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிரான உத்தவ் தாக்கரே தலைமையிலான எழுச்சி மிகுந்த உற்சாகத்தை தருகிறது" என ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.