அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: வென்றது வங்கதேசம்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: வென்றது வங்கதேசம்

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தன.

இந்த நிலையில் டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி  சட்டோகிராமில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்று அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணிக்கு பால் ஸ்டிர்லிங் - டிம் டெக்டர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டிர்லிங் ஒருபக்கம் தாக்குப்பிடித்த நிலையில், மறுபக்கம் டிம் டெக்டர் 17 ரன்னிலும், ஹாரி டெக்டர் 5 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.

மேற்கொண்டு களமிறங்கிய லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பெர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த பால் ஸ்டிர்லிங்கும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜார்ஜ் டக்ரேல் 19 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, மற்ற அயர்லாந்து பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதன் காரணமாக அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 117 ரன்களை மெட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சைஃப் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சைஃப் ஹசன் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 7 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த தன்ஸித் ஹசனுடன் இணைந்த பர்வெஸ் ஹொசைனும் அதிரடியாக விளையாட வங்கதேச அணியின் வெற்றியும் உறுதியானது. இதில் அபாரமாக விளையாடிய தன்ஸித் ஹசன் அரைசதம் விளாசியதுடன், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவருடன் இணைந்து விளையாடிய பர்வேஸ் ஹொசைனும் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன் மூலன் வங்கதேச அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தன்ஸித் ஹசன் ஆட்ட நாயகன் விருதையும், மஹெதி ஹசன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.