ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி தபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி - புள்ளிகள் பட்டியலில் முதலிடம்!

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி தபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி - புள்ளிகள் பட்டியலில் முதலிடம்!

ப்ரோ கபடி லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸை, தபாங் டெல்லி அணியும், பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணியையும் வீழ்த்தின.

12-வது ப்ரோ கபடி லீக் தொடர் இந்த ஆண்டு சென்னை, விசாகபட்டினம், டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நான்கு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை, சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 29-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 20 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தபாங் டெல்லி அணியைச் சேர்ந்த சந்தீப், அஷு மாலிக், சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி யுபி யோதாஸை களம் கண்டது. இதில் 36-28 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி யுபி யோதாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. பாட்னா பைரேட்ஸ் அணியை சேர்ந்த வீரர் அயன் லோச்சாப் சிறப்பாக விளையாடி தமது அணிக்கு 15 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.

இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியையும், இரண்டாவது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தபாங் டெல்லி அணியையும் எதிர்கொள்கின்றன.