டிசம்பர் 12இல் வெளியாகும் ’வா வாத்தியார்’ - சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட ரீமிக்ஸ் பாடல்
கார்த்தி நடித்துள்ள ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் தனது தாயாருடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து வெளியிட்ட பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், பல மாதங்களாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இறுதியாக வரும் டிசம்பர் 12ஆம் தேதி 'வா வாத்தியார்' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது தாயாருடன் சேர்ந்து பாடிய பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான ’ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்’ பாடலை சந்தோஷ் நாராயணன் தனது தாயாருடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாராயணனின் தாயாருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதேபோல் இப்படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட பலரும் வீடியோ பார்த்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
இப்படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார் என கூறப்படும் நிலையில், எம்.ஜி.ஆரின் பாடலின் ரீமிக்ஸ் வடிவம் படத்தில் இடம்பெறுகிறதா? என்கிற எதிர்பார்ப்பு நடிகர் கார்த்தி ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தியுடன், நலன் குமாரசாமி இணைகிறார் என்றவுடன் படத்தின் மீது எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்தது. அதேபோல படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.