ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்சமயம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இதனால் தற்போது இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 28 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 22 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 20 ரன்களுக்கும் என சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துணைக்கேப்டன் ஷுப்மன் கில்லும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மேற்கொண்டு களமிறங்கிய திலக் வர்மா 5 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 3 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும், அர்ஷ்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அக்ஸர் படேல் 21 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் - மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மேத்யூ ஷார்ட் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 12 ரன்னிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 30 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர்கள் டிம் டேவிட் 14 ரன்களிலும், ஜோஷ் பிலீப் 10 ரன்களுடனும் நடையைக் கட்டினர். மேற்கொண்டு களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 17 ரன்களிலும், சேவியர் பார்ட்லெட் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால், ஆஸ்திரேலியாவின் தோல்வியும் உறுதியானது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், ஷிவம் தூபே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.